முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தை பாஜகவினர் விமர்சித்து வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் துபாய் பயணத்தை விமர்சித்த பாஜக
துபாய் கண்காட்சி பழமையான மற்றும் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது. ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாய் நாட்டில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் கலந்து கொள்ள சென்றது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். துபாயில் முதலீடு செய்வதற்காகத்தான் முதலமைச்சர் சென்றிருப்பதாகவும் குற்றசாட்டியிருந்தார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மோடியின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்கலாமா?
இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருப்பதை முழுமையாக வரவேற்பதாக தெரிவித்தார். இது போன்ற பயணம் தொடர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களின் வெளிநாடு சுற்றுப்பயணம் தொடர்பாக அபத்தமான குற்றச்சாட்டுக்களை கூறலாமா? என கேள்வி எழுப்பினார். இதனை அண்ணாமலை ஏற்றுக்கொள்ள தயாரா என கார்த்திக் சிதம்பரம் கேட்டார். மேலும் திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவிற்கே மாடலாக அமையுமா என்பதனை காலம்தான் பதில் சொல்லும் என கூறியவர், திராவிட மாடல் ஆட்சி என்பதை அறிஞர்கள் தான் விளக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் வருவேனா, இல்லையா என்பதனை ஆருடம் சொல்ல முடியாது எனவும் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
