நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியும் ராஜ்யசபா எம்பி பதவியும் கொடுத்த திமுக சட்டப்பேரவை தேர்தலில் 4 முதல் 6 தொகுதிகள் தான் என்று கூறியிருப்பது வைகோவை ஏமாற்றம் அடைய வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் வரை திமுகவிற்கு எதிர் அணியில் இருந்தவர் வைகோ. மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர விடமாட்டேன் என்று சூளுரைத்து கடந்த முறை விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியவர் வைகோ. ஆனால் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதன் பிறகு மனம் மாறிய வைகோ திமுக கூட்டணியில் இணைந்தார். மேலும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் பதவியில் அமர வைக்கப் பாடுபடப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

ஆனாலும் கூட வைகோவை திமுக சற்று தள்ளியே வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விசிக, இடதுசாரிக்கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக மதிமுகவிற்கு ஒரே ஒரு  தொகுதியை மட்டுமே வழங்கியது. இருந்தாலும் கூட ராஜ்யசபா எம்பி பதவி என்று திமுக கொடுத்த வாக்குறுதியால் வைகோ கூட்டணியில் தொடர்ந்தார். ஆனால் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதால் வைகோ திமுக மீது வருத்தத்தில் இருந்தார். ஆனால் வேறு எந்த வாய்ப்பும் இல்லாத காரணத்தினால் அந்த ஒரு தொகுதியுடன் திருப்தியும் அடைந்திருந்தார்.

அதே சமயம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வைகோ தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் கூட வைகோ பெரிய அளவில் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தற்போது மறுபடியும் அரசியல் செயல்பாடுகளில் வைகோ தீவிரம் காட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அழைத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட இருக்கும் உத்தேச தொகுதிகளின் எண்ணிக்கை விவரங்களை அந்த கட்சி தலைமை கூறி வருகிறது.

அதன்படி வைகோ கட்சியான மதிமுகவிற்கு 4 முதல் அதிகபட்சம் 7 தொகுதிகள் வரை தான் ஒதுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் வைகோ இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். இதனால் மதிமுக – திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முன்னேற்றம் இல்லாமல் அப்படியே நிற்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வைகோ தனது மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த ஆலோசனையின் போது திமுக தரப்பில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தருவதாக கூறியுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, மற்றும் அவர்கள் கொடுக்கும் தொகுதிகளுடன் கூட்டணியை தொடர்வதாக அல்லது வேறு ஏதேனும் நிலைப்பாடு எடுப்பதா? என்று மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைகளை வைகோ கேட்க உள்ளதாக சொல்கிறார்கள். வெறும் 4 முதல் 7 தொகுதிகள் என்றால் மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி வேண்டாம் என்று கூறவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.எனவே வைகோ திமுக கூட்டணியில் நீடிப்பது மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு தான் தெரிய வரும்.