ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவான தக்‌ஷாவின் ஆலோசகராகப் பங்காற்றிய நடிகர் அஜித் குமாருக்கு அண்ணாபல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது.

தக்‌ஷா குழுவின் ஆலோசகராகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நடிகர் அஜித்தை அண்ணா பல்கலைக்கழகம் நியமித்தது. இதையடுத்து  ஆளில்லா விமான வடிவமைப்பு ஆலோசகர் மற்றும் விமானியாக அஜித் கடந்த 10 மாத காலம் பணியாற்றினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா என்ற மாணவர் குழுவினர், நடிகர் அஜித்தின் ஆலோசனையின்படி உருவாகிய ஆளில்லா விமானம் சுமார் 6 மணிநேரம் விண்ணில் பறந்து, உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனை படைத்தது. கல்லூரிகளுக்குள் நடந்த இந்த போட்டியில் முதல் இடத்தையும் அஜித்தின் தக்‌ஷா டீம் தட்டிச் சென்றது.

அஜித்தின் ஆலோசனையின் கீழ் தக்‌ஷா குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக அளவிலான ஆளில்லா விமானங்களை மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தொடர்பான போட்டியில் பங்கேற்று 2-ம் இடம்பிடித்தது. இந்நிலையில், தக்‌ஷா குழுவுக்கு அளித்த பங்களிப்புக்காக அஜித் குமாருக்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக, பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அஜித்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வருங்காலத்தில் விருப்பம் இருந்தால் தேவைக்கேற்ப, கவுரவ பதவியில் அஜித் ஆலோசகராக பணியாற்ற வேண்டும் என்றும் அவரை அண்ணா பல்கலை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆளில்லா ஏர் டேக்சியும் அஜித்தின் ஆலோசனையில் உருவாக்கப்பட்டது.