தற்கொலை செய்து கொண்ட கால் டாக்சி ஓட்டுநருக்கு ஐ.நா.வில் சிலை வைக்கப்போதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 25-ம் தேதி மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே ரயில்முன் பாய்ந்து ராஜேஷ் என்ற கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் போலீசார் தகாத வார்த்தைகளில்  திட்டியதே தனது விபரீத முடிவுக்கு காரணம் என, தற்கொலைக்கு முன் ஓட்டுநர் பேசி பதிவு செய்த வீடியோ வெளியானது. கால் டாக்சி ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, கால் டாக்சி ஓட்டுனர்கள் தொடர்ந்து போராட்டம்  நடத்தி வருகிறார்கள். அரசு கண்டுகொள்ளவே இல்லை. இறந்த ஊழியருக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர். 

இதுப்பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். பொதுவாக ஒரு தற்கொலை என்பது எதற்குமே ஒரு தீர்வு ஆகாது. வாழ்வதற்கு போராட்டம் அவசியம். ஒருவர் பேசி விட்டார் என்பதால் உடனே தற்கொலை பண்ணிக்கொள்வது நல்ல விஷயம் அல்ல. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. அவர், மேல் அதிகாரியிடம் சொல்லி கீழ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். உயிரை மாய்த்துக் கொண்டதால் அவரது குடும்பத்துக்குத்தான் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

தற்கொலை செய்துவிட்டால் அவருக்கு ஐ.நா.வில் போய் சிலை வைக்கப்போறது இல்லை. அதேபோல, 365 நாளும் அவரை நினைத்து யாரும் அழுதுகொண்டு இருக்கப்போவதும் இல்லை. இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால். அதோடு முடிச்சிட்டு, அவனவன் அடுத்த வேலையை பார்ப்பான். இதை உணர வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.