ஒரு தாயின் பிள்ளைகள் இருவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்தை 2021ல் ஆள வேண்டும் என மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் அவரது மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி.


 
தன்னை கட்சியில் இணைத்துக்கொள்ள குடும்ப உறவுகளிடம் தூது அனுப்பினார். ஆனால் அவரது தம்பியான ஸ்டாலின் கிஞ்சித்தும் மனமிறங்கவில்லை. கருணாநிதி நினைவிடத்தில் ஒரு லட்சம்தொண்டர்களை திரட்டி கட்சியில் தனது பலத்தை நிரூபிப்பேன் என கூட்டத்தை கூட்டினார். ஸ்டாலின் எதற்கும் மசியாததால் எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்தார் அழகிரி. திமுகவுக்கு இனி சரிவு தான். திமுக ஒரு இடத்தில் கூட வெல்லாது. திமுகவில் இருந்து சீனியர்கள் பலர் வெளியேறுவார்கள் என்று அவ்வப்போது எதிர்ப்பு அரசியலை கையாண்டார். அடுத்து அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தத்தையும் தொடங்கினர். sun ன் son க்கே தடையா? அஞ்சா நெஞ்சரே தலைமையேற்க வா..! என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் மதுரையில் திமுக ஆதரவாளர் ஒருவர், மு.க.ஸ்டாலின் மற்றும் மு.கஅழகிரி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் ஒருசேர கைகளை சேர்த்து வைத்திருப்பது போன்ற புகைப்படத்துடன்ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஒரு தாயின் பிள்ளைகளே இருவரும் ஒன்று சேர வேண்டும், அதுவே தமிழகத்தின் எதிர்பார்ப்பு, இந்த தொண்டனின் எதிர்பார்ப்பு எனவும், 2021ல் தமிழகத்தை சேர்ந்து மீட்டெடுக்க அழையுங்கள் தலைவரே - இணையுங்கள் அண்ணா அஞ்சா நெஞ்சரே என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக திமுக ஆதரவாளர் ஒருவரால் மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கலைஞர் பாணியில் சொல்லப்போனால் அண்ணன் என்றால் உதடுகள்கூட ஒட்டாது. தம்பி மனது வைத்தால் மட்டுமே உள்ளத்தால் ஒட்டலாம். மு.க.ஸ்டாலின் மனது வைப்பாரா..?