சென்னை நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று சாலையோரம் இருந்த தேநீர்க் கடை மற்றும் அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. 

பின்னர் சாலை அருகே இருந்த சுவர் மீது மோதி நின்றது. இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காரின் ஓட்டுநரை பிடித்து விசாரிக்க முயன்ற போது, அந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதுமட்டுமின்றி மதுபோதையில் போலீசாரை வாய்க்கு வந்த படி மோசமாக பேசியும், கை நீட்டி தாக்கவும் முயன்றுள்ளார்.

இது தொடர்பான காட்சி கடந்த 2 நாட்களாக இணைய தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்தசூழலில் காவல்துறையினரை தரக்குறைவாக பேசிய நவீன் என்ற அந்தநபர் , அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. 

இதையடுத்து  அமைச்சரின் மகன் என தவறான வீடியோக்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று புகார் மனு அளித்துள்ளார். சமூக வலைதளங்களில் தவறான தகவல் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் போலீ வீடியோவை பரப்பியவர் விழுப்பிரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக பிரமுகர் என்பது தெரிய வந்தது.  இதையடுத்து அவர் மீது சென்னை மத்திய சைபர் கிரைம் போலீசார் இருபிரிவுகளின் கீழ் வழக்கு  பதிவு செய்துள்ளனர்.