ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்திற்கு தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும், இதற்கு காரணமான தி.மு.க.-காங்கிரஸ் கட்சியினரை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க கோரி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவித்தது.

அதன்படி சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் அமைச்சர் எஸ்,பிவேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். விழுப்புரத்தில் நடைபெற்ற போதுக் கூட்டத்தில் பேசிய தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,  இலங்கைத் தமிழர்களுக்க திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து செய்த துரோகங்களை பட்டியலிட்டார்.

தங்கள் சுய நலத்துக்காக எப்படி எல்லாம் மத்திய காங்கிரஸ் அரசை திமுகவினர் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை குறிப்பிட்ட அமைச்சர் சண்முகம், லட்சக்கணக்கான ஈழத்தமிழர் படுகொலைக்கு காரணமான  கருணாநிதியை போர்குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவிக்கும்வரையில் இந்தப் போராட்டம் தொடரும் என அதிரடியாக பேசினார்.