காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம்  ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு  சென்றால் வேலூர் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அத் திட்டத்திற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து கொண்டு தண்ணீர் தர மறுத்தால், கர்நாடகம் எப்படி தண்ணீர் தரும்? என துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் இருந்து கொண்டு, மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுபவர்களுக்கு, சமுதாயம் மீது என்ன அக்கறை உள்ளது? இவர்களே இப்படி கூறினால், கர்நாடகத்தில் இருந்து மட்டும் எப்படி தண்ணீர் தருவார்கள். தமிழகத்திற்கு உள்ளேயே தண்ணீர் பிரச்சனையை தி.மு.க. எழுப்புவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.