விழுப்புரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். “தொடர்ந்து 3-வது முறையாக அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனையைப் படைக்கும். தொடர்ந்து 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனக்கு பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று கடைசியாகச் சொன்னார். அவர் சொன்னதை நிறைவேற்றும் வகையில் நாம் தேர்தல் பணியைச் செய்திட வேண்டும். பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்காக அதிமுக பணியாற்றும் என்பது மக்களுக்கு தெரியும்.

அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அதை வாக்குகளாக மாற்றுவதே நம் பணி. 2006- 2011ல் திமுக ஆட்சியில் இருந்தபோது மக்கள் பட்ட பாடு என்னவென்று நமக்கு தெரியும். நில அபகரிப்பு செய்து மக்களை மிரட்டினார்கள். இன்று ஆட்சியில் இல்லாதபோதே உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை மிரட்டுகிறார்.  நாம் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையோடு தேர்தல் பணியாற்ற வேண்டும். மக்களின் ஆதரவு நமக்கு உள்ளது. தொண்டர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுகதாம். இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். நாம் ஒன்றுபட்டு பணியாற்றினால் 2021-ல் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவது உறுதி.” என்று சி.வி.சண்முகம் பேசினார்.