*    அயோத்தியில் ராமர் கோவில் விரைவில் பிரம்மாண்டமாக கட்டப்படும் என அமித்ஷா சொல்வது சரிதான். கோவில் கட்டுவதற்கான ஆரம்ப பணிகளை சிவசேனா முழு வீச்சில் துவங்கியது. வி.எச்.பி. தொண்டர்கள், சாதுக்கள், துறவிகள், பா.ஜ. உட்பட கோடிக்கணக்கான தொண்டர்களின் கூட்டு முயற்சியில்தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. எனவே எந்த ஒரு தனிக்கட்சியும் அந்த பெருமையை சொந்தம் கொண்டாட முடியாது. 
-    சஞ்சய் ராவத் (சிவசேனா எம்.பி.)

*    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அரசியல் சாசனம் நமக்கெல்லாம் புனிதமானது. அரசின் கொள்கைகள் குறித்து விவாதியுங்கள், ஜனநாயக முறைப்படி போராட்டத்தில் ஈடுபடுங்கள். உங்களுடைய கோரிக்கைகள், பேச்சுக்களுக்கு காது கொடுக்க தயாராக உள்ளோம். ஆனால் சில அரசியல் கட்சிகள் உங்களின் தோளின் மீது ஏறி, உங்களை ஏவிவிடுவதை உணர்ந்து கொள்ளுங்கள்.
-    நரேந்திர மோடி (பிரதமர்)

*    குடியுரிமை சட்டம் என்பது, மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளான அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் நோக்கத்தில்தான் கொண்டு வரப்பட்டது. மற்றபடி, இந்தியாவை சேர்ந்த எந்த மதத்தினரின் குடியுரிமையையும் பறிக்கும் நோக்கத்தில், கொண்டுவரப்படவில்லை. 
-    வெங்கையா நாயுடு (துணை ஜனாதிபதி)

*    மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டம், முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட, அ.தி.மு.க. எம்.பி.க்கள் ஓட்டளித்துள்ளனர். அதனால்தான், அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அ.தி.மு.க.வையும் கண்டிக்கிறோம். 
-    ஜவாஹிருல்லாஹ் (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்)

*    உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. அதற்கு அவருக்கு எந்த அருகதையும் கிடையாது. அவர் காந்தியுமல்ல, நான் புத்தனுமல்ல. 
-    சி.வி.சண்முகம் (சட்ட அமைச்சர்)

*    தமிழகத்தில் யார் கட்சி துவக்கினாலும் அ.தி.மு.க.வை மிஞ்ச முடியாது. வரும் 2021 சட்டசபை தேர்தலுக்குப் பின் தி.மு.க. என்ற கட்சி, தி.க. எனப்படும் திராவிடர் கழகம் போல மாறிவிடும். அதன் தலைவரான மு.க. ஸ்டாலின் எடுக்கும் அரசியல் மூவ்கள் இதை நோக்கித்தான் அக்கட்சியை தள்ளிக் கொண்டிருக்கின்றன. 
-    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

*    ஊசி இடம் கொடுத்தால்தான், நூல் உள்ளே நுழையும்! என நான் கூறியது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறாக புரிந்து கொண்டோருக்கு என் வருத்தத்தால் தெரிவித்து கொள்வதாக, மகளிர் ஆணையத்தில் கூறினேன். 
-    கே.பாக்யராஜ் (நடிகர், இயக்குநர்)

*    கம்பராமாயணத்தை ‘காமரசம்’ என்றுதான், அண்ணாதுரை முதலில் பேசி வந்தார். அதை முறியடிக்கும் வகையில், எங்கள் தலைவர் ஜீவா, மேடைதோறும் கம்ப ராமாயண சிறப்புகளைப் பேச துவங்கினார். அதற்கு வரவேற்பு கிடைத்ததும், காமரசம் எனும் விமர்சனத்தை தி.மு.க.வினர் நிறுத்தினர். 
-    சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி)

*    வரும் ஜனவரி மாதம், எங்கள் இயக்கத்தில் கடை மட்ட நிர்வாகிகள் தேர்தல் நடக்கிறது. அதற்குப் பின், அனைத்து மட்ட கட்சி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவெடுப்போம். 
-    முரளிதர் ராவ் (தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர்)

*    எங்கள் கட்சியை விட்டு பலரும் வெளியேறுகின்றனர்! என சொல்ல முடியாது. முகம் தெரியாத சிலர் தான் வெளியேறுகின்றனர். அவர்கள் கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள். எங்கள் கட்சி தொண்டர்களால் உருவான கட்சி. 
-     பழனியப்பன் (அ.ம.மு.க. துணை பொதுச் செயலர்)