சி.பி.ஐ ரெய்டு உள்ளிட்டவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் இடைத்தேர்தல் பணிகளை துவங்குமாறு அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போதே தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த இரண்டு தொகுதிகளும் காலியாக உள்ளதாக ஏற்கனவே சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திடம் கூறிவிட்டார்.

 

எனவே நான்கு மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கும் நாளில் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்புகிறார். கடந்த ஆர்.கே.நகர் தேர்தலை போல் இல்லாமல் இந்த இரண்டு இடைத் தேர்தல்களிலும் ஆளும் கட்சியான அ.தி.மு.க வெற்றிக் கொடி நாட்ட வேண்டியது அவசியம் என்பதும் எடப்பாடியாரின் கணக்கு. ஏனென்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இடைத்தேர்தல் வெற்றி அவசியம் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

ஏற்கனவே அ.தி.மு.கவில் தினகரனுக்கு ஆதரவான குரல்கள் அவ்வப்போது எழுந்து வருகிறது. இந்த நிலையில் இடைத்தேர்தல்களிலும் நாம் கோட்டை விட்டால் அ.தி.மு.கவின் பிடி நம்மிடம் இருந்து நழுவிவிடும் என்றும் எடப்பாடி கருதுகிறார். மேலும் இடைத்தேர்தலில் வென்றால் தான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவையும் சமாளிக்க முடியும் என்றும் அவர் நினைக்கிறார். 

இதனால் உடனடியாக இடைத்தேர்தல் பணிகளை துவங்குமாறு திருவாரூர் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட அமைச்சர்களுக்கு எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். அதிலும் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரை நேரிலேயே அழைத்து திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டியது உங்கள் பொறுப்பு என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதே போல் உணவுத்துறை அமைச்சர் காமராஜை அழைத்து திருவாரூரில் தி.மு.கவை எதிர்கொள்ள சரியான வேட்பாளரை தேர்வு செய்து கூறும் படி எடப்பாடி அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் இடைத்தேர்தல் குறித்து ஓ.பி.எஸ்சிடமும் முதலமைச்சர் சீரியசாக பேசிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.