தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்ட ஆரம்பித்துள்ளது.

திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி, குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன், திருவல்லிக்கேணி எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் மறைவை தொடர்ந்து தமிழகத்தில் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த மூன்று தொகுதிகளில் திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தியாக வேண்டும். ஆனால் கொரோனா பரவி வருவதால் இந்த தொகுதிகளுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

அதே சமயம் செப்டம்பர் 7ந் தேதிக்கு பிறகு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்க உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தற்போதுக்குள் கட்டுப்பாட்டிற்குள் வருவது போல் தெரியவில்லை. ஆனால் இந்த ஆண்டு பீகாரில் சட்டப்பேரவை தேர்தலை ஆணையம் நடத்தியாக வேண்டும். அடுத்த ஆண்டு தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.

எனவே கொரோனா சூழலில் தேர்தலை எப்படி நடத்துவது என்கிற குழப்பம் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. கொரோனாவை காரணம் காட்டி இடைத்தேர்தல்களை தள்ளிப்போடுவது போல் பொதுத்தேர்தலை தள்ளிப்போட முடியுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே சட்டப்பேரவை தேர்தல்களை தள்ளிப்போட்டாலும் எத்தனை நாட்களுக்கு தள்ளிப்போட முடியும்? அப்படியே தேர்தல்களை தள்ளிப்போட்டாலும் மாநிலத்தை நிர்வாகம் செய்வது யார் என்று பல்வேறு குழப்பங்கள் வரும்.

எனவே கொரோனா சூழலிலும் தென்கொரியா, இலங்கையில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதை பின்பற்றி இந்தியாவிலும் அனைத்து தேர்தல்களையும் திட்டமிட்டபடி நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த சட்டப்பேரவை தேர்தல்களுக்கு முன்னோட்டமாக இடைத்தேர்தல்களை நடத்தி அதன் மூலம் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். எனவே செப்டம்பர் மாதம் இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தலை நடத்துவது என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் திருவல்லிக்கேணி, குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளில் தேர்தல்கள் நடத்தப்படும் என்று சொல்கிறார்கள். இந்த மூன்று தொகுதிகளிலும் கொரோனா தீவிரம் பெரிய அளவில் இல்லை. அதே சமயம் இந்த முறை இடைத்தேர்தல் பணிகளுக்கு கொரோனாவை காரணம் காட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். வெளிமாவட்டத்தில் இருந்து பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சியினர் வருவதற்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் பல கட்டுப்பாடுகளுடன் இடைத்தேர்தலை நடத்தி சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒத்திகை நடைபெறும் போல் தெரிகிறது.

அதே சமயம் அரசியல் கட்சியினர் கொரோனா சமயத்தில் இடைத்தேர்தலா என்கிற பீதியில் இருப்பார்கள். ஏனென்றால் தேர்தல் என்றால் தெருத் தெருவாக அழைய வேண்டியிருக்கும். முக்கிய நிர்வாகிகள் பலர், 60 வயதை கடந்தவர்கள். அவர்களை எல்லாம் எப்படி பிரச்சாரத்திற்கு அழைத்து வருவது, தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என்கிற கவலை அரசியல் கட்சியினருக்கு வர ஆரம்பித்திருக்கும்.