தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம்,  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் எம்.எல்.ஏ.க்கள் மறைவால் காலியானதாக அறிவிக்கப்பட்டது.  இந்தத் தொகுதிகளின் திமுக எம்.எல்.ஏ.க்களான கே.பி.பி. சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். வழக்கமாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இறந்தால், 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், ஓராண்டுக்குக் குறைவாக சட்டப்பேரவையின் காலம் இருந்தால், இடைத்தேர்தலை நடத்தாமல் விட்டுவிடவும் தேர்தல் ஆணையத்தால் முடியும்.

கடந்த 2005-ம் ஆண்டில் காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி தொகுதிகளின் இடைத்தேர்தல் சட்டப்பேரவை மே மாதத்தில் நடைபெற்றது. அதாவது, சட்டப்பேரவை காலம் முடிவதற்கு ஓராண்டு இருந்த நிலையில் நடத்தப்பட்டது. இதேபோல 2015-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக வசதியாக ஆர்.கே. நகர் தொகுதியில் உடனடியாகவும் மே மாதத்திலும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலும் சட்டப்பேரவையின் காலம் ஓராண்டுக்கு முன்பாக நடத்தப்பட்டது.

எனவே திருவொற்றியூர், குடியாத்தம்,  சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தேர்தல் நடத்துவதில் சந்தேகம் இருந்து வருகிறது. இப்போது சட்டப்பேரவையின் காலம் ஓராண்டுக்கும் குறைவாகக் குறைந்துவிட்டதால், இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் நடத்த தேவையில்லை என்று முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. 

இந்நிலையில், இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில்:- 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது என்றார்.