கஜா புயல் பாதித்த இடங்களில் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 

சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தலைமைச் செயலர் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதால் இரண்டு தொகுதிகளிலும் இடைதேர்தலை தற்போது நடத்த வேண்டாம் எனப் பரிந்துரை செய்திருந்தார். தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தற்போது வெளியிடவில்லை. 

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளை முதல்வர் பரிசீலினை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரத்தை பறிக்க நினைக்கும் வைகோவின் எண்ணம் கனவில் கூட நிறைவேறாது. மேலும் கஜா புயல் பாதித்த இடங்களில் நிவாரண பணிகள் நடைபெற்றுவருவதால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவது சந்தேகம் என தமிழிசை கூறியுள்ளார். ஆகையால் இடைத்தேர்தல் தள்ளிப்போவதை தமிழிசை சூசமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலோடு இந்த 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.