கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி உயிரிழந்தார். இதனால், கன்னியாகுமரி தொகுதி காலியாக உள்ளதாக லோக்சபா செயலகம் அறிவித்தது. மேலும் கன்னியாகுமரி தொகுதி காலியாக இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். பிப்ரவரி 28-ம் தேதிக்குள் கன்னியாகுமரி இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். ஆனால், தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற இருப்பதால், அப்போது இடைத்தேர்தல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது இரண்டாவது முறையாகும். கன்னியாகுமரி தொகுதிக்கு முன்னர் இதன் பெயர் நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியாகும். கடந்த 1967-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மார்ஷல் நேசமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், 1968-ம் ஆண்டு அவர் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தத்தால், 1969-ம் ஆண்டில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
ஏற்கனவே 1967-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்த பெருந்தலைவர் காமராஜர், நாகர்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு தற்போது 50 ஆண்டுகள் கழித்து கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் மறைவால் மீண்டும் அத்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.