சசிகலாவால், தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றால் அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என்றுதானே அர்த்தம். அப்படியானால் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று டிடிவி ஆதரவாளர் எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதேபோல் தினகரனால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் நியமனமும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தினகரன் நீக்கப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன், சசிகலாவால் தினகரன் நியமிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றால் அவரது நியமனங்கள் எதுவும் செல்லாது என்றுதானே அர்த்தம். அப்படியானால் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி. சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் தாங்கள் வகிக்கும் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று கூறினார்.

3500 பொதுக்குழு உறுப்பனிர்களைக் கேட்காமல் வெறும் 75 உறுப்பனிர்களை மட்டுமே வைத்துக் கொண்டு எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியது எப்படி செல்லுபடியாகும் என்றும் தங்க தமிழ்செல்வன் கேள்வியெழுப்பியுள்ளார்.