இந்த தீர்ப்பு வந்தால் தான் தெரியும் இடைத் தேர்தல் 2 தொகுதிகளுக்கா ? அல்லது 20 தொகுதிகளுக்கா ? என்று என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோரின் மறைவால் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பெரும் சவாலாக இருப்பது திமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் ஆகிய கட்சிகள்தான். பலமான கட்டமைப்புடன் இந்த இரு தொகுதிகளிலும் திமுக உள்ளது. அதே நேரத்தில் டி.டி.வி.தினகரனும் இரு தொகுதிகளிலும் இப்போதே களத்தில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கிவிட்டார்.

இந்த  இக்கட்டான நிலையில்தான் குட்கா வழக்கு தொடர்பான ரெய்டு ஆளும் தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் வருமான வரித்துறை மற்றும் சிபிஐ ஆகியவை ஆளும் கட்சி தொடர்பான பழைய ஆவணங்களை எல்லாம் தூசு தட்டி வெளியே எடுத்து வருகிறது.

ஒவ்வொரு பைலிலும் என்ன பூதம் கிளம்பப் போகிறதோ ?  என இபிஎஸ், ஓபிஎஸ் டீம் திணறிப் போய் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில்தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் (17 ஆம் தேதி) கண்டிப்பாக வரும் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு 18 எம்எல்ஏக்களுக்கு சாதகமாக வந்தால் ஃபுளோர் டெஸ்ட் எனப்படும் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்படும்.

ஒரு வேளை ஆளும்கட்சிக்கு சாதகமாக வந்தால் ஏற்கனவே 2 இடைத் தேர்தல்கள் நடைபெற வேண்டிய நிலையில் இந்த 18 எம்எல்ஏக்கள் தொகுதிக்கும் சேர்த்து மொத்தமாக 20 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் என தெரிகிறது.

அதில் ஆளும் கட்சி ஜெயித்துவந்தால் தான்  அதிமுக ஆட்சியில் தொடர முடியும் என்ற நிலை உள்ளது. தற்போதைக்கு 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு வரும் வரை திக்..திக் நிமிடங்கள் தான்.