கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பதினெட்டு தொகுதி சட்டமன்ற தேர்தல் இவை இரண்டிலுமே அ.தி.மு.க. மற்றும் தி.மு.க இரண்டுக்கும் இணையாக அ.ம.மு.க.வும் பணம் கொடுத்திருக்கிறது! சில இடங்களில் அவர்களை விட அதிகமாகவே தினகரன் பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார்! என்பதுதான் விமர்சகர்கள் தயக்கப்படாமல் எடுத்து விடும் தகவல். 

இதை தினகரனோ அவரது கட்சியின் தலைமை நிர்வாகிகளோ பெரிதாய் மறுக்கவேயில்லை. ஆன் தி வேயில் ‘சொன்னா சொல்லிட்டு போங்கடா சோனமுத்தான்களா’ எனும் ரேஞ்சுக்கு கடந்து சென்றனர். இந்நிலையில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியும் ஒன்று. இந்த தொகுதி மற்ற எந்த தொகுதியை காட்டிலும் தினகரனுக்கும், எடப்பாடியாருக்கும் மிக முக்கியம். காரணம்? தங்கள் கட்சியிலிருந்து தி.மு.க.வுக்கு தாவியதோடு, தங்களை மிக கடுமையாக விமர்சித்து தள்ளும் செந்தில்பாலாஜி போட்டியிடுவதுதான். 
 
எனவே மிக முழுமையாக பண பலத்தை இந்த தொகுதியில் இறக்கி, செந்தில்பாலாஜியை தோற்கடித்தே தீருவது எனும் முடிவில் இரண்டு கட்சிகளுமே உள்ளன. குறிப்பாக தினகரன் ‘எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை’ எனும் முடிவில் இருப்பதோடு, செந்தில்பாலாஜியின் செல்வாக்கை பைபாஸில் சரிப்பதற்காக சில ஆடியோ வைரல்களுக்கும் திட்டமிட்டுள்ளதாக தகவல்.  

இந்நிலையில், அரவக்குறிச்சி தொகுதியின் அ.ம.மு.க. வேட்பாளரான ஷாகுல் அமீது கொடுத்திருக்கும் பேட்டியில் “இந்த தொகுதியில் மற்ற கட்சியினர் பணம் கொடுத்தால் அதை சட்ட ரீதியாயு தடுத்து, சந்திப்போம். அவர்களிடம் பணம் மட்டுமே உள்ளது, ஆனால் அ.ம.மு.க.வில் பணம் இல்லை. ஆனால் தலைவர் தினகரனிடம் மக்கள் நலன் பற்றிய கொள்கைகள் ஏராளமாக உள்ளன. நம்புங்கள் எங்களை, அதை நாங்கள் செயல்படுத்துவோம்.” என்றிருக்கிறார்.

 

இதைப் பார்த்து ‘பிரசாரத்தோட துவக்கத்துலேயே எவ்வளவு பொய் பேசுறாரு பாரு அ.ம.மு.க. வேட்பாளர். அப்படியே அவங்க தலைவர் மாதிரியே இருக்குது புத்தி.’ என்று ஆளுங்கட்சி கிண்டலடித்திருக்கிறது.