விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார்.  

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டது. திமுகவின் தயாநிதிமாறனையும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சாம்பாலையும் எதிர்த்து தெஹ்லான் பாகவி போட்டியிட்டார். ஆனால், எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு எதிர்பார்த்த ஓட்டு கிடைக்காமல் படுதோல்வி அடைந்தது. 

இதனிடையே, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் அக்டோர் 21-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இந்த இடைத்தேர்தலை அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், அமமுக கூட்டணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ. கட்சி திடீரென 2 தொகுதி இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்டோபர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் விக்ரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி- காமராஜர் நகர் ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போதைய அரசியல் சூழலை கருத்தில்கொண்டு நடைபெறவிருக்கும் இந்த இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

ஆகவே, இடைத்தேர்தல் நடைபெறும் விக்ரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் புகழேந்தி, நாங்குநேரி தொகுதியில் போட்டிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்  மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் ஆகியோரின் வெற்றிக்குப் பணியாற்றுமாறு கட்சியின் தொண்டர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.