நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக முன்னிலை பெற்று வரும் நிலையில் திமுக கூட்டணியின் தோல்விக்கு விஜயகாந்தின் பிரச்சாரமும் ஒரு காரணம் என திமுக கொள்கைபரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் அதிமுக வெற்றிபெற்றதற்கான காரணம் குறித்து பேசிய அவர், ‘அதிமுக பணபலத்தை வைத்து வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுகவின் இந்த வெற்றியை நியாயமான வெற்றியாக ஏற்றுக் கொள்ள முடியாது.  அதிமுக பலவீனமான கட்சியாக மாறி விட்டது. தோல்வி பயத்தால் தான் உடலில் பலவீனமாக இருக்கும், நடக்கவே முடியாத விஜயகாந்தை அவர்கள் பிரச்சாரத்திற்கு அழைத்து சென்று அனுதாபம் தேடினர். இப்படிக் கிடைத்தது தான் அதிமுகவின் வெற்றி’என அவர் தெரிவித்தார். 

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் வெற்றி பெற போவது யார் என்று தமிழ்நாடே அவளுடன் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த இரு தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த் உடல் நலக்கோளாறு காரணமாக அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. 

வடசென்னை தொகுதியில் மட்டும் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள சென்ற அவர் பாதியிலேயே திரும்பினார். இந்நிலையில் விஜயகாந்த் இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டது வியப்பை ஏற்படுத்தியது.  தற்போது இதையே அதிமுகவுக்கான வெற்றிக்கு காரணம் என திமுக கூறி வருகிறது.