20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 

அதிமுக தலைமையகத்துக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களைக் கூறினர். இதன் பின்பு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். இடைத்தேர்தலை எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என்று முதலமைச்சர் கூறினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அதிமுகவினர் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.