விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் தோல்வியால் துவண்டு போகாமல் மேலும் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதாக திமுகவினரே உதயநிதியை பாராட்டி வருகின்றன.

இடைத்தேர்தல்களில் திமுகவின் தலைமை கழக பேச்சாளர்களை விட அதிக இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டவர் உதயநிதி. ஸ்டாலின் இளைஞராக இருந்த போது எப்படி சுற்றிச் சுழன்றாரோ அதேபோல் உதயநிதியும் இடைத்தேர்தல் பணியில் தீவிரம் காட்டினார். இளைஞர் அணி செயலாளர் பதவிக்கு பிறகு வந்த முதல் தேர்தல் என்பதால் கூடுதல் கவனமும் செலுத்தினார்.

ஆனாலும், கூட இடைத்தேர்தல்களில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதற்கு தலைமைக்கும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கும் நேரடி தொடர்பு இல்லாதது தான் என்று உதயநிதிக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து தலைமைக்கு ரிப்போர்ட் கொடுக்க அப்போதும் இப்போதும் தனி டீம் செயல்படும்.

ஆனால், திமுகவை பொறுத்தவரை லோக்கல் மாவட்டச் செயலாளர் வைத்தது தான் சட்டம். அனைத்து பணிகளும் மாவட்டச் செயலாளரின் விருப்பத்திற்கு ஏற்பவே நடைபெறும். திமுக தலைமையும் மாவட்டச் செயலாளர் பார்த்துக் கொள்வார் என்று அடுத்த வேலையில் மும்முரமாகிவிடும். இதனை முதன் முதலில் மாற்றியது மு.க.அழகிரி தான்.

திருமங்கலம் இடைத்தேர்தல் பணிகளை நேரடியாக கண்காணித்து அதன் பிறகு திருமங்கலம் பார்முலாவை தமிழக தேர்தல் களத்தில் அவர் தான் கொண்டுவந்தார். ஆனால் 2011ம் ஆண்டு ஆட்சியை இழந்த திமுக அதன் பிறகு இடைத்தேர்தல்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதே நிலை நீடித்தால் பொதுத் தேர்தலிலும் பிரச்சனையாகிவிடும் என்பதை உதயநிதி உணர்ந்துள்ளார்.

இதன் அடிப்படையில் வேலூரில் வெற்றிக்கு காரணம் என்ன விக்கிரவாண்டி தோல்விக்கு காரணம் என்ன என கடந்த 10 நாட்களாகவே தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதோடு மட்டும் அல்லாமல் இனி தேர்தல் பணிகளுக்கு என்று சம்பிரதாயமாக இருக்கும் நபர்களை நீக்கிவிட்டு தனி டீமை உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக சொல்கிறார்கள். இதற்காக திமுக மட்டும் அல்லாமல் தேர்தல் வேலைகளில் சிறப்பாக ஈடுபடும் மற்ற கட்சியினரையும் உதயநிதி குறி வைத்திருப்பதாக பேசுகிறார்கள்.