20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 3 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.கவிற்கு தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனத்தில் வரும் ஜனவரிக்குள் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தொகுதி மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் காலமானதால் காலியாக உள்ள 2 தொகுதிகள் என 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்வது என்கிற மனநிலைக்கு அ.தி.மு.க வந்துவிட்டது.  

அ.தி.மு.கவை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் முடிவு தான் எடப்பாடி அரசு தொடருமான கவிழுமா என்பதை தீர்மானிக்க உள்ளது. எனவே தான் நேற்றே 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை அ.தி.மு.க தொடங்கியுள்ளது. அதே சமயம் தி.மு.கவிற்கும் இந்த இடைத்தேர்தல் என்பது கவுரவத்துடன் தொடர்புடையது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த காரணத்தினல் முன்வைக்கப்படும் விமர்சனத்திற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் உள்ளார். 

மேலும் 20 தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றும் பட்சத்தில் பெரும்பான்மை பலத்துடன் கூட்டணி அரசு அமைக்கும் வாய்ப்பு கூட ஸ்டாலினுக்கு கிடைக்கலாம். எனவே அந்த கட்சியும் 20 தொகுதி இடைத்தேர்தலை மிக கவனமாக அணுக உள்ளது. தற்போது காலியாக உள்ள 20 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 17 தொகுதிகளில் தி.மு.க போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. சோளிங்கர் தொகுதியில் காங்கிரசும், ஆம்பூரில் மனித நேய மக்கள் கட்சியும், ஒட்டப்பிடாரத்தில் புதிய தமிழகம் கட்சியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தன. 

இந்த மூன்று தொகுதிகளைத் தான் தற்போது இடைத்தேர்தலில் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.கவிற்கு தூது அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சோளிங்கர் தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க விட்டுக் கொடுக்கும் என்றும் மற்ற 19 தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் தான் போட்டியிடுவார்கள் என்றும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.