விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் ஒரே ஒரு நாள் எடப்பாடியார் மேற்கொண்ட பிரச்சாரம் ஸ்டாலின் பிரச்சாரத்தை தூக்கி அடிக்கும் வகையில் இருந்ததாக அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் நாங்குநேரியில் இரண்டு நாட்கள், விக்கிரவாண்டியில் இரண்டு நாட்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து இரண்டு நாட்கள் ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதே சமயம் திமுக போட்டியிடும் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரித்து திண்ணை பிரச்சாரத்தோடு வேன் பிரச்சாரமும் செய்தார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பதவி கிடைத்தது ஒரு விபத்து என்று ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் விபத்து போல முதலமைச்சர் பதவி எடப்பாடிக்கு கிடைத்துவிட்டது என்று கூறி கடுமையான விமர்சனங்களை ஸ்டாலின் முன்வைத்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் எடப்பாடி பிரச்சாரத்தை துவக்கினார்.

மாலை நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடியாரின் பேச்சில் அனல் பறந்தது. அதுவும் தன்னை விபத்தில் உருவான முதலமைச்சர் என்று ஸ்டாலின் கூறியதற்கு சரியான பதிலடி கொடுத்தார் எடப்பாடி. தான் எப்படி அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் வரை உயர்ந்தேன் என்றும் முதலமைச்சரானது தனது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் அவர் கூறினார்.

அதோடு மட்டும் அல்லாமல் ஸ்டாலின் திமுக தலைவரானது தான் விபத்து என்றும் அவரால் இனி ஒரு எம்எல்ஏ கூட ஆக முடியாது என்று கூறி பிரச்சாரத்தை ஹைடெசிபளுக்கு கொண்டு சென்றார். எடப்பாடியாரின் இந்த பேச்சு அனைத்து ஊடகங்களிலும் முக்கிய இடம் பிடித்தது. ஸ்டாலின் பிரச்சாரத்தை காட்டிலும் எடப்பாடியாரின் பிரச்சாரம் சமூக வலைதளங்களிலும் வைரல் ஆனது.

இதே போல் நாங்குநேரியிலும் எடப்பாடியின் பிரச்சாரம் அதிர வைப்பதாக இருந்தது. இரண்டு தொகுதிகளிலும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஏற்பாட்டை அதிமுகவின்ர செய்திருந்தனர். இதனால் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி உறுதி என்று அதிமுகவினர் தற்போதே மார்தட்டி வருகின்றனர்.