கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் 21 அன்று நடைபெறுகிறது. இரு தொகுதிகளிலும் காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த இரு தொகுதிகளிலும் கடந்த 20 நாட்களாக தீவிர தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது. அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல விக்கிரவாண்டி யில் திமுக வேட்பாளரையும், நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரையும் ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இரு தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இன்று மாலை 6 மணிக்குள் வெளியூர் ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு பொதுக் கூட்டம், ஊர்வலம் நடத்தக் கூடாது; திரைப்படம், தொலைக் காட்சி, எப்எம் ரேடியோ, சமூக ஊடகங்கள், மூலம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளும் நாங்குநேரியில் 299 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் 1,917 தேர்தல் பணியாளர்களும், நாங்குநேரியில் 1,460 தேர்தல் பணியாளர்களும் தேர்தல் அன்று பணியாற்ற உள்ளனர்.