நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக நிச்சயமாக போட்டியிடும் என பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாமல் அமமுக படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக, அதிமுகவில் இணைந்து வந்தனர். இந்த தோல்விக்கு சின்னம் தான் காரணம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆகையால், வேலூர் மக்களவை தொகுதியை புறக்கணிப்பதாக டிடிவி.தினகரன் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் எங்கள் கட்சியை பதிவு செய்யும் பணியில் இருப்பதால் தான் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. கட்சியை பதிவு செய்து, அதன்பிறகு தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியில் இருக்கிறோம்.

கட்சியை பதிவு செய்த பிறகு நாங்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் அந்த தொகுதிகளில் நிச்சயம் அமமுக போட்டியிடும். ஆவின் பால் விலை உயர்வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆட்சியாளர்கள் அகம்பாவத் தோடு பேசாமல், ஏழை- எளிய மக்களை பாதிக்கின்ற பால்விலை உயர்வை உடனே திரும்பப்பெற வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கை. அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. அதுவரை காத்திருப்போம். 

லஞ்ச, லாவண்யத்தை மறைக்கத்தான் மாவட்டங்களை பிரிக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் சொன்னதாக சொல்கிறார்கள். பாம்பின் கால் பாம்பிற்கு தெரியும். அதனால் அதுகுறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.