பணம் என்ற கிலுகிலுப்பையை மக்களுக்கு காட்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் திமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவை, மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2 தொகுதி இடைத்தேர்தலில் தோற்றாலும், உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிபெறும் என்றும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறினார்.

ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி திமுக தான். தமிழகத்தில் தற்போது நடைபெறுவது எடப்பாடி ஆட்சி அல்ல மத்திய பாஜக அரசின் எடுபிடி ஆட்சி. இந்த ஆட்சியை பற்றி பேசினால் முதல்வருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. 2 தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் தோற்று, பண நாயகம் வென்றிருக்கிறது. இங்கு பணம் என்ற கிலுகிலுப்பையை காட்டி அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றது என்று விமர்சித்த அதிமுக, 2 தொகுதி இடைத்தேர்தலில் அல்வா கொடுத்தா வெற்றி பெற்றார் என விமர்சித்துள்ளார். நடை பெறுகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அது உள்ளாட்சி தேர்தல் என்றாலும், பொதுதேர்தல் என்றாலும் மிகப்பெரிய வெற்றிபெற உழைக்க வேண்டும். அதற்கு அனைவரும் உங்கள் ஆதரவை தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.