நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கேட்ட நிலையில் அதிமுக பாஜகவை புறக்கணித்துள்ளது. விரைவில் அவர்களை கழற்றிவிட அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மாபெரும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். ஆனால், 39 தொகுதிகயில் தோல்வியடைந்து தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் தோல்வி என மூத்த நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை குற்றம்சாட்டி வந்தனர்.

 இதனிடையே, வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் நடந்தது. இந்த 6 தொகுதிகளில் வாணியம்பாடி, ஆம்பூர் போக்ற தொகுதிகளில் முஸ்லீம் ஓட்டுகள் அதிகமாக இருப்பதால் பாஜகவை பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என்று அதிமுக தரப்பில் இருந்து கட்டளையிடப்பட்டது. இதனால், பாஜகவினர் வேலூர் மக்களவை தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் புறக்கணித்தனர். பிரச்சாரத்தின் போது அவரது புகைப்படங்களும் இடம் பெறவில்லை. இதனால், திமுகவிடம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று சந்தித்து அதிமுக அமைச்சர்கள் ஆதரவு கோரி உள்ளனர். 

ஆனால், பாஜக தலைவர்களை சந்தித்து அவர்கள் இதுவரை ஆதரவு கேட்கவில்லை. இதனால், பாஜக தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய அரசின் உதவியால் தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்ற விசுவாசம் கொஞ்சம் கூட இல்லாமல் புறக்கணிக்கிறார்களே என்று பாஜக தலைவர்கள் மேலிடத்திலும் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக சேர்த்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் தோல்வி நிச்சயம் என்பதால் இடைத்தேர்தலில் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் பாஜகவை கழற்றி விடவும் அதிமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.