இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களை அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா ஒப்புதலோடு இன்று அறிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சட்டமன்ற தேர்தலில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் கூறி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னசாமி, திடீரென மரணமடைந்ததால், அந்த தொகுதியிலும் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் உருவானது.

புதுவையில், தேர்தலில் போட்டியிடாமல் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நாராயணசாமிக்கு ஆதரவாக நெல்லிதோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அந்த தொகுதியிலும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் புதுவை, நெல்லித்தோப்பு ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர்களின் பெயர்களை முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு இன்று வெளியிட்டுள்ளது.

தஞ்சையில் அதிமுக வேட்பாளராக ரங்கசாமி போட்டியிடுகிறார். அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் ஏ.கே. போஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதியில் ஓம் சக்தி சேகர், அஇஅதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.