பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 2 நாட்களும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 2 நாட்களும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு போக்குவரத்து தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் பேருந்துகள் இயங்காதோ என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்தது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துறைவாரியாக தனித்தனியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 2 நாட்களும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை போக்குவரத்து தொழிற்சங்கம் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2 நாட்களும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பாதிப்பு இல்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் இருந்து அந்தந்த போக்குவரத்து பணிமனைகளுக்கு நேரடியாக சில்லறை விற்பனையில் டீசல் கொள்முதல் செய்து நிரப்பப்படுகிறது.

இதனால் தமிழக அரசுக்கு மாதம் ரூ.3½ கோடி லாபம் கிடைக்கிறது. மேலும் இலவச பயண சலுகையை பயன்படுத்தி 62 சதவீதம் பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் 28, 29 ஆம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது, அன்றைய தினங்களில் பணிக்கு வந்த, வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறை வாரியாக காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
