bullet parimalam throw petrol bomb infront of dinakaran home
தினகரன் வீட்டு முன் காரில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரனின் வீடு சென்னை அடையாறில் உள்ளது. இன்று திடீரென அவரது வீட்டு முன் ஒரு காரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில், தினகரனின் கார் ஓட்டுநர் மற்றும் புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகியாக இருந்த புல்லட் பரிமளத்தின் அமமுக சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கட்சியிலிருந்து தினகரன் தன்னை நீக்கியதால் ஆத்திரமடைந்த புல்லட் பரிமளம் தனது எதிர்ப்பை காட்டும் விதமாக தினகரன் வீட்டு முன்பாக தனது காரை நிறுத்தி, பெட்ரோல் குண்டை தன் காரின் மீதே வீசியுள்ளார். இந்த சம்பவத்தில் தினகரனின் கார் ஓட்டுநர் பாண்டியன் மற்றும் புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் வானகரம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரிமளத்திற்கும் சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த காரிலிருந்து ஒரு அரிவாளும் கைப்பற்றப்பட்டுள்ளது. புல்லட் பரிமளத்தின் ஓட்டுநர் சுப்பையாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரிவாள் வைத்திருந்தது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புல்லட் பரிமளம் அதிமுகவில் இருந்தவர். இவர் அதிமுகவிலிருந்தபோது, பதவிக்காக மைத்ரேயனுக்கு தங்கம் மற்றும் ரொக்கப்பணத்தை கொடுத்ததாகவும் ஆனால் மைத்ரேயன் தனக்கு பதவி வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார் எனவும் போஸ்டர் அடித்து ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும் கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஜெயலலிதாவால் 2016ம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன் அவருடன் இணைந்து பணியாற்றிய புல்லட் பரிமளம், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
