தினகரன் வீட்டு வாசலில் காருக்கு தீவைத்த புல்லட் பரிமளம், பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் நகர செயலாளர் பதவியிலிருந்து கடந்த 20 நாட்களுக்கு முன் நீக்கபட்ட புல்லட் பரிமளம், அதுதொடர்பாக தினகரனை சந்தித்து பேசுவதற்காக சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்திற்கு புல்லட் பரிமளம் வந்தார்.

தினகரன் வீட்டினுள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருப்பதால், புல்லட் பரிமளத்தை அனுமதிக்க தினகரனின் ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர். 

ஏற்கனவே கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அதிருப்தியில் இருந்த புல்லட் பரிமளம், தினகரனை சந்திக்க அனுமதி மறுத்ததால், அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றுள்ளார். அப்போது தினகரனின் ஆதரவாளர்கள் தடுக்க முயன்றபோது தனது காரின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்ததில், தினகரனின் கார் ஓட்டுநர் பாண்டியன், புகைப்பட கலைஞர் டார்வின் ஆகியோர் தீக்காயங்கள் அடைந்தனர். அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

காருக்கு தீவைத்ததில் புல்லட் பரிமளத்திற்கும் தீக்காயம் ஏற்பட்டது. தீக்காயங்களுடன் தப்பியோடிய புல்லட் பரிமளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். புல்லட் பரிமளத்தின் கார் ஓட்டுநர் சுப்பையாவிடம் விசாரணை நடத்திய போலீஸார், புல்லட் பரிமளத்திடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு சென்று கட்சிக்காகத் தான் செலவு செய்த ரூ.88 லட்சத்தை திருப்பி தரக்கோரி தினகரன் வீட்டின் அருகே இருந்த பேனர்களை எரிக்க சென்றதாக போலீசாரிடம் புல்லட் பரிமளம் வாக்குமூலம் அளித்துள்ளார்.