கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில், போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால் மறுபடியும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர் பதவி வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கலாராணி, திட்டமிட்டு திமுகவினர் அசிங்கப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டியுள்ளார்.
மறைமுக தேர்தல்:
கடந்த மார்ச் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், துணை மேயர் நகராட்சி, பேருராட்சி தலைவர், துணைதலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களிலும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி திமுக வேட்பாளர்களே கூட்டணி கட்சியினரை எதிர்த்து நின்று தோற்கடித்து வெற்றி பெற்றனர். இச்சூழலில், அவசர ஆலோசனை நடத்திய முதலமைச்சர், கூட்டணியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கட்டளையிட்டார்.
இதனையடுத்து கட்சி தலைவரின் உத்தரவின் படி அங்கும் இங்கும் பரவலாக பெரும்பாலானோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தமிழக அளவில் காலியாக உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.இந்நிலையில் தான், கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற இருந்தது. இந்த இடம் பட்டியலின பெண் வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக புலியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன, இதில் 8வது வார்டு சுயேட்சை வேட்பாளர் மட்டும் போட்டியின்றி தேர்வான நிலையில், மீதமுள்ள 14 வார்டுகளுக்கு கடந்த பிப். 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
திமுக கவுன்சிலர் ராஜினாமா:
இதில் திமுக 12 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. திமுக அதிகளவு வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தாலும், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. இதனால் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அதிருப்தியடைந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மறைமுக தேர்தலின் போது, 1 வது வார்டில் வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கலாராணியை, திமுகவினர் முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக முன்மொழிந்தனர். இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரான கலாராணி உள்ளிட்ட வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு:
கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய கட்சி தலைமை வலியுறுத்தியதை அடுத்து கடந்த 8 ஆம் தேதி தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார். இந்நிலையில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டதால், புலியூர் பேரூராட்சி கூட்டரங்கில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், பாஜக கட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர், தலைவர் பதவிக்கு போட்டியிடும் சிபிஐ வார்டு உறுப்பினர் கலாராணி, துணைத் தலைவர் ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர். மீதிமுள்ள திமுக கவுன்சிலர்கள் இறுதிவரை வரவில்லை. இதனால் போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால் மறுபடியும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியடைந்த கவுன்சிலர் கலாராணி, திட்டமிட்டு திமுகவினர் மீண்டும் என்னையும், கட்சியையும் அசிங்கப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டியுள்ளார்.
திமுக மீது கூட்டணி கட்சி குற்றச்சாட்டு:
மேலும் காலை 10 மணி வரை துணைத் தலைவர் உள்ளிட்ட 3 பேர் மட்டுமே வந்திருந்ததாலும் தேர்தல் நடத்தும் அலுவலர் 10 நிமிட கூடுதல் அவகாசம் வழங்கியும் 8 உறுப்பினர்கள் கூட வருகை தராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் கலாராணி, " கடந்த 4 ஆம் தேதி நடந்த தேர்தலில் திமுக வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை நிறுத்தி வெற்றிப் பெற வைத்து கட்சியையும், என்னையும் அசிங்கப்படுத்தினர். தற்போது மீண்டும் திமுக வார்டு உறுப்பினர்கள் 11 பேரும் துணைத் தலைவர் வீட்டுக்கு சென்ற நிலையில், தேர்தலுக்கு வரவில்லை.போதிய வார்டு உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 2வது முறையாக கட்சியையும், என்னையும் அசிங்கப்படுத்தி உள்ளனர். எனவே, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்" என்று பேசினார்.
