அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கூட்டணியை உறுதி செய்த பாமக- அதிமுக இடையே நட்பு பாலம் அமைந்துள்ளது. இதனையடுத்து துணை முதல்வர் ஓ.பிஎஸின் அண்ணனாக உருவெடுத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். 

இன்று மாசி மகம். ஜெ பிறந்த நட்சத்திர தினம். இதனையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை சென்னை கிரவுண் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதிமுக சார்பில் ஓ.பி.எஸ்- ஈபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூட்டணியை அறிவித்து பேசிய ஓ.பி.எஸ், ‘’ இடைத்தேர்தலில் 21 தொகுதிகளுக்கும் பாமக ஆதரவளிக்கும். இதற்கு ஒப்புதலாக அதிமுக சார்பில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளரானும், பாமக சார்பில் நிறுவனர் ராமதாஸி ஐயா அவர்களும், அக்கட்சியின் தலைவர் அருமை அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களும் இணைந்து கையெழுத்திட்டுள்ள நல்ல செய்தியை தெரிவித்துக் கொள்கின்றோம்’’ என அவர் தெரிவித்தார்.  

அன்புமணியை அண்ணன் என அழைத்த ஓ.பி.எஸின் வார்த்தைகளை கோர்த்து ஆளும் கட்சி துணை முதலமைச்சரே சின்ன ஐயாவை அண்ணன் என அழைக்கிறார் என பெருமையாக பேசி வருகின்றனர் பாமக தொண்டர்கள்.