1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய சென்னை அசோக்நகர் கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர். 

சென்னை அசோக் நகரில் மத்திய அரசு பள்ளியான கேந்திர்ய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மார்ச் 1-ந் தேதியில் இருந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து பேரம் பேசி மாணவர்களை சேர்ப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது.

இதனால் கடந்த 2 மாதமாக மாணவர் சேர்க்கை சம்பந்தமான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த பள்ளியில் கட்டாய கல்வி மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டில் 1-ம் வகுப்பில் மாணவனை சேர்ப்பதற்காக அசோக் நகரை சேர்ந்த ஒருவர் விண்ணப்பித்து இருந்தார்.

அவரை பள்ளி முதல்வர் ஆனந்தன் நேரில் அழைத்து எம்.பி.யின் சிபாரிசு கடிதம் இருந்தால்தான் முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் படிக்க இடம் வழங்க முடியும். இல்லையென்றால் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால்தான் சேர முடியும் என்று கூறினார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த மாணவரின் பெற்றோர் சி.பி.ஐ. அலுவலகம் சென்று முறையிட்டனர். இதனால் பள்ளி முதல்வர் ஆனந்தனை கையும், களவுமாக பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி ரூ.1 லட்சம் லஞ்ச பணத்தை பள்ளி முதல்வர் ஆனந்தன் வாங்கும் போது மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.