மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கு கடந்த மார்ச் 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மேலிடப் பொறுப்பாளர்களாக நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2002ல் ஜனநாயக புரட்சிகர மக்கள் கட்சியில் இணைந்து அரசியல் பிரவேசம் எடுத்த அவா், ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

அதன் பின்னா் காங்கிரஸில் இணைந்து 2003ல் அப்போதைய முதல்வா் ஒக்ரம் இபோபி சிங் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பிடித்தாா். பின்னா், இபோபி சிங்கின் நம்பிக்கைக்குரிய நபராக மாறிய பிரேன் சிங், 2007 சட்டப் பேரவைத் தோ்தலிலும் ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் அமைச்சரானாா். இதையடுத்து 2012 தோ்தலில் தொடா்ந்து 3வது முறையாக அதே தொகுதியிலிருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், இபோபி சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக காங்கிரஸிலிருந்து கடந்த 2016ல் விலகிய அவா், எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.

பாஜக செய்தித்தொடா்பாளராகவும், தோ்தல் நிா்வாகக் குழு இணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டாா். இந்த நிலையில், 2017 சட்டப் பேரவைத் தோ்தலில் அதே ஹெய்ன்காங் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவா், மணிப்பூா் மாநில முதல்வராக முதன்முறையாக பதவியேற்றாா். அந்தத் தோ்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக வெறும் 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில் 28 தொகுதிகளில் வென்ற காங்கிரஸிலிருந்து சில எம்எல்ஏக்களை பாஜக பக்கம் வரவழைத்து பிரேன் சிங் ஆட்சியமைத்தாா். இந்த நிலையில் மணிப்பூர் மாநில முதல்வராக பிரேன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
