நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கோவிஷீல்ட்,  பைசர், கோவாக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகள் மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் ஹர்ஷவர்தன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகளில் நடந்த மருந்து ஆராய்ச்சியின் விளைவாக கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தவண்ணம் உள்ளன. ஏற்கனவே அமெரிக்க நிறுவனத்தின் பைசர், மாடர்னா ஆகியவற்றின் மருந்துகளுடன், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி, சீனாவின் இரண்டு வகை கொரோனா தடுப்பூசி என மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. 

இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மருந்தை இந்தியாவின் புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்த கொடுக்கிறது. இந்தியாவில் இந்த மருந்துக்கு கோவிஷீல்ட் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அதன் இறுதி கட்ட சோதனைகள் நடந்து முடிந்து, அது 95% கொரோனாவுக்கு எதிராக வீரியத்துடன் செயல்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த மருந்தை பயன்படுத்துவதற்காக கோவிஷீல்ட் நிறுவனம். மத்திய அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் இங்கிலாந்து,  இந்த மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பும் கோவிஷீல்ட்  மருந்தை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு அதற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்து முடிந்தது. 

மேலும் அதற்கான கூடுதல் தரவுகள் கேட்கப்பட்டுள்ளதால், தற்போது அந்த தரவுகளை கோவிஷீல்ட் நிறுவனம்,  மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கியுள்ளது. எனவே அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான நிபுணர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில் 3 மணி நேர ஆலோசனைக்கு பின்னர் சீரம் நிறுவன ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கும்படி நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதேநேரத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சின், மற்றும் பைசர் உள்ளிட்ட தடுப்பூசிகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நிபுணர் குழு பரிந்துரை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஏற்கனவே தான் தெரிவித்ததைப் போல நாடு முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளார். இது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதேநேரத்தில் எந்த குழப்பமும் இல்லாமல்  நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக ஒத்திகை இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. எனவே இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு  கொண்டுவர மத்திய அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.