மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் போர் குரல் எழுப்பி வருகின்றன. புதிய கல்வி கொள்கை மாணவர்களின் உரிமைக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் இருக்கிறது என்பதே அவர்களின் வாதம் .  அதே நேரத்தில் புதிய கல்விக் கொள்கையில் பல ஆக்கபூர்வமான, செயலூக்கமிக்க திட்டங்களும் இடம்பெற்றுள்ளன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. புதிய கல்விக் கொள்கையின் கீழ் கல்வித் தரத்தை மேம்படுத்துவதுடன்,  குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொள்ளும் வகையில் மதிய உணவுடன், கூடுதலாக காலை உணவை வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணி காப்பதுடன், அவர்களின் மன வளர்ச்சியை துரிதப்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்தவாரம் அதாவது, ஜூலை 29 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை அங்கீகரிக்கப்பட்டது. 34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கைகள் பல்வேறு  சீர்திருத்தங்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

அரசு இதற்காக பல்வேறு இலக்குகளை முன்வைத்துள்ளது, அதில் மிக முக்கியமானது பள்ளியில் மதிய  உணவுடன் கூடுதலாக ஆரோக்கியமான காலை உணவு வழங்கப்படும் என்பதே ஆகும். ஆரோக்கியமான காலை உணவு வழங்குவதன் மூலம் குழந்தைகளின் மன வளர்ச்சி துரிதப்படுத்து முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக கல்வி வளர்ச்சியுடன் சேர்த்து குழந்தைகளின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்கவில்லை அல்லது அவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்களின் கல்வி நேரடியாக பாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும்.  இந்த அனைத்து அம்சங்களையும்  கருத்தில்கொண்டு, சமூக சேவகர், ஆலோசகர் மற்றும் சமூகத்தை பள்ளிக் கல்வியுடன் இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காலை உணவு சூடாக வழங்கப்பட முடியவில்லை என்றால், மாற்றாக அவர்களுக்கு வெல்லம், வேர்க்கடலை,  மற்றும் உள்ளூர் பழவகைகள் வழங்கப்படும். 

அதேபோல் எல்லா பள்ளிகளிலும் உள்ள குழந்தைகளும் வழக்கமான சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், பள்ளிகளில் 100 சதவீத தடுப்பூசி வசதிகளும் ஏற்படுத்தப்படும், அதன் கண்காணிப்புக்கு சுகாதார அட்டைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஆயத்த வகுப்பு அல்லது மழலையர் வகுப்புக்கு முறையாக அழைத்துச் செல்ல ஏற்பாடு போன்றவைகள் புதிய கல்வி கொள்கையில் திட்டமிடப்பட்டுள்ளன.  வகுப்பறையில் விளையாட்டு அடிப்படையிலான கற்றல் மீது கவனம் செலுத்துதல், குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் அவர்கள் சிந்திக்கும் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல்  போன்ற திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 இன் கீழ் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு அனைத்து அரசு மற்றும் அதனுடன் தொடர்புடைய பள்ளிகளிலும், இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 11.59 கோடி குழந்தைகள் பயனடைகின்றனர். இதில் சுமார் 26 லட்சம் சமையல் உதவியாளர்கள் பணியாற்றுகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.