நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட களம் இறக்கப்படாத நிலையில் அந்த கட்சியின் வழிகாட்டுதல் குழுவிலும் முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு வரை ஜெயலலிதா அரசியல் ரீதியாக எடுத்திருந்த இரண்டு முக்கிய கொள்கைகள் ஒன்று இந்துத்துவா மற்றொன்று விடுதலைப்புலிகள் எதிர்ப்பு. ராமர் கோவில் கட்டுவதற்காக தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு கரசேவகர்களை அனுப்பி வைத்தார் ஜெயலலிதா என்பார்கள். இதன் மூலமே அவரது தீவிர இந்துத்வா நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளலாம். 2002ம் ஆண்டு வாணியம்பாடியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

எனவே எந்த கட்சியாக இருந்தாலும் வாணியம்பாடியில் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்துவது தான் வழக்கம். அந்த வகையில் திமுக வாணியம்பாடி வேட்பாளராக நாகூர் ஹனீபாவை களம் இறக்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அந்த தொகுதியில் வடிவேலு என்பவரை ஜெயலலிதா வேட்பாளராக நிறுத்தினார். முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதியில் ஒரு இந்துவை நிறுத்துவதா என்று விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அதனை எல்லாம் ஜெயலலிதா பொருட்படுத்தவில்லை, அதே சமயம் வாணியம்பாடியில் முஸ்லீமான நாகூர் ஹனீபா தோல்வியை தழுவினார்.

இந்துவான வடிவேலு வாணியம்பாடியில் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2004 தேர்தலில் பாஜகவுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். இப்படி ஜெயலலிதா சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்று எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்க பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால் 2009ம் தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் தெரிந்தன. கட்சியின் நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளித்தார்.

ரம்ஜான் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் வருடம் தவறாமல் கலந்து கொண்டார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மீண்டும் அதிமுகவில் முஸ்லீம் விரோத நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட முஸ்லீம் வேட்பாளர் இல்லை. இது குறித்து விளக்கம் கேட்ட போது, ராமநாதபுரம், வேலூர் தொகுதிகளில் ஒன்றை முஸ்லீம்களுக்கு ஒதுக்குவது வழக்கம், ஆனால் இரண்டையும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிவிட்டதாக அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதே சமயம் கடந்த ஆண்டு ராஜ்யசபா தேர்தல் சமயத்தில் முஸ்லீமான முகமது ஜான் எம்பியாக்கப்பட்டார். இதன் மூலம் முஸ்லீம்களுக்கு அதிமுக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்கிற விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது, அதிமுகவில் மிக மிக முக்கியமான வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவில் 9 பேர் இந்துக்கள், 2 பேர் கிறிஸ்தவர்கள். ஒருவர் கூட முஸ்லீம் இல்லை. அதிலும் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா இந்த குழுவில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு மட்டும் அல்ல தமிழ் மகன் உசேன், முகமது ஜான்போன்றோரையும் கூட இந்த குழுவில்சேர்க்கவில்லை. அதிமுக என்கிற மாபெரும் கட்சியை வழிநடத்தும் குழுவில் முஸ்லீம் ஒருவருக்கு கூட இடமில்லையா? என்கிற விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளன. 11 பேருக்கு பிரதிநிதித்துவம் அளித்துள்ள அதிமுக அதில் ஒருவரை கூட ஏன் முஸ்லீமாக நியமிக்கவில்லை என்கிற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை பயன்படுத்தி திமுகவில் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளது.