அனைத்து எம்.எல்.ஏக்களுக்கு தினமும் ஒரு சூட்கேஸை எடப்பாடி பழனிசாமி பரிசாகக் கொடுப்பதால் அவற்றை பத்திரப்படுத்தி வைக்க இடம் தேடிவருகிறார்கள்.  

 

தமிழக சட்டசபை கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் கூடியது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் முடிந்த பின்னர் திண்டுக்கல் சீனிவாசன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் எம்.எல்.ஏக்களுக்கு பரிசுகளை வழங்கினர். 

ஒவ்வொரு துறைமீதும் விவாதம் நடைபெறும் அன்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும் அன்றன்று ஒவ்வொரு பரிசுகளை வழங்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏக்களுக்கு திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டலில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து கொடுத்தார். ஒவ்வொரு பையிலும், 3 ஹாட்ஸ்பாக்ஸ்களில் பிரியாணி வழங்கப்பட்டது. மாலை சுற்றுச்சூழல் விவாதம் தொடங்கி முடிந்த பிறகு அத்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் விலையுயந்த சூட்கேஸை பரிசளித்தார்.

இன்று பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முடிந்தவுடன் அமைச்சர் செங்கோட்டையன் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் சூட்கேஸ்களை பரிசாக வழங்கினார். அதில் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டிருந்தது. இப்படி தினமும் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர்கள் விதவிதமான பரிசுகளை வழங்க இருக்கின்றனர். தினமும் ஒரு சூட்கேஸ் கொடுத்தால் இன்னும் 25 நாட்கள் நடைபெற உள்ள மானியக்கோரிக்கை விவாதத்தில் ஒரு எம்.எல்.ஏவுக்கு 25 சூட்கேஸ்கள் கொடுக்கப்படும். அதனை எம்.எல்.ஏக்கள் எங்கே எப்படி பத்திரப்படுத்தி வைப்பது என தெரியாமல் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.