முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டது. சசிகலா, ஓபிஎஸ் அணி என பிளவடைந்த அதிமுக, சில மாதங்களுக்குப் பிறகு டிடிவி தினகரன் ஆதரவாக சில எம்எல்ஏக்கள் செயல்பட்டனர். இதனால் அதிமுக அணி 3 பிரிவாக
இருந்தது.

கட்சி சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த டிடிவிக்கு 16 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர். தொடர்ந்து டிடிவிக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு பெருகி வந்தது. அப்போது
டிடிவிக்கு 37 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம் அணி அண்மையில் இணைந்தது. இந்த இணைப்பால், டிடிவி தினகரன் தரப்பு கடும் கோபமடைந்தது.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைப்பின்போது, பொது செயலாளர் சசிகலா நீக்கப்படுவார் என்றும், விரைவில் பொதுக்குழு கூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கட்சியில் தனக்கு எதிராக செயல்படும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நீக்கியும், ஆதரவாக செயல்படுபவர்கள் கட்சி பொறுப்பில் நியமித்தும் வருகிறார் டிடிவி தினகரன்.

எடப்பாடி தரப்பினர், தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை அவர்கள் பக்கம் இழக்க குதிரைபேரத்தில் ஈடுபடுவார்கள் என்றும், தங்களின் பாதுகாப்புக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட் ஒன்றில் டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று தேனி மாவட்டம் சென்றுள்ள டிடிவி தினகரனை, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளர். ஏ.கே.போஸூடன் சேர்த்து டிடிவி தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

எம்எல்ஏக்கள் அணி மாறுவதால், எடப்பாடி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் ஆட்சிக்கு எந்த பாதிப்பில்லை என்றும் கூறப்படுகிறது. 

தற்போது எம்எல்ஏக்களின் மனநிலை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. அவர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் என்பது கணிக்க முடியாத நிலை உள்ளது.

ஆட்சி கவிழுமா? இல்லையா? என்று எந்த கேள்விக்கும் தற்போது சரியான பாதை தெரியவில்லை. இதனால், பெரிதும் குழப்பமடைந்துள்ளனர் தமிழக மக்கள்.

இந்த நிலையில், எடப்பாடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? எடப்பாடி ஆட்சி நீடிக்குமா? டிடிவி தினகரனின் கனவு பலிக்குமா? தமிழக மக்களின் குழப்பம் விலகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...