கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய பூத் கமிட்டி பணிகளில் பாதியளவிற்கு முடிந்துவிட்டதாக ரஜினி மக்கள் மன்ற தலைமை நம்பிக் கொண்டிருந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் கொடுத்த ஆவணங்களில் பாதி போர்ஜரி என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்தார். அத்தோடு 2021 சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் அரசியல் கட்சியாக உருவெடுத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் அவர் கூறியிருந்தார். இதனை அடுத்து ரஜினி ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் புதிதாக மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளை ரசிகர் மன்ற நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்ப்டட நிர்வாகிகளுக்கு கொடுக்கப்பட்ட பணியே தமிழகத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத் கமிட்டிகளுக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான்.

ஒரு பூத் கமிட்டியில் அதிகபட்சம் 60 பேர் வரை இருக்க வேண்டும் என்று ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகிகளை அறிவுறுத்தியிருந்தது. ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ள மகிழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை களம் இறங்கி பூத் கமிட்டிக்கு ஆள் சேர்க்க ஆரம்பித்தனர். ஆனால் ரஜினி கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பட வேலைகளுக்கு சென்றுவிட்டார். இதனால் ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள் பூத் கமிட்டி உருவாக்கத்தில் சுணக்கம் அடைந்தனர். அதே நேரத்தில் மக்கள் மன்ற மாநில நிர்வாகிகளாக ராஜூ மகாலிங்கம் பிறகு இளவரசன் தொடர்ந்து ஏ.ஜே ஸ்டாலின் என பலர் மாறி மாறி வந்தனர்.

இதனால் பூத் கமிட்டி உருவாக்கம் பின்னடைவை சந்தித்தது. பிறகு ரஜினி கட்சி ஆரம்பிப்பது சந்தேகம் என்கிற தகவல் வெளியானதால் பூத் கமிட்டி பணிகளையே பல நிர்வாகிகள் மறந்து போயினர். இந்த நிலையில் நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் கட்சி தொடங்குவது எப்போது என்பதை வரும் 31ந் தேதி ரஜினி தெரிவிக்க உள்ளார். இதனை அடுத்து மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி, மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டனர். மறுபடியும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதற்கிடையே ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகளின் விவரங்களை மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து தலைமை பெற்றுள்ளது. மேலும் அந்த பூத் கமிட்டிகளில் உள்ள விவரங்களை சரிபார்க்கும் போது பல்வேறு பெயர்கள் போலி என்பது தெரியவந்தது. மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பி, தங்கை உள்ளிட்டோர் பூத் கமிட்டியில் சேர்க்கப்பட்டிருந்தனர். மேலும் வாக்குரிமையே இல்லாத சிலரையும் பூத் கமிட்டியில் மெம்ராக்கியிருந்தனர். இந்த தகவல் மக்கள் மன்ற தலைமை நிர்வாகிகளை அதிர வைத்தது.

தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில் பூத் கமிட்டி பணிகளே இன்னும் முழுமை அடையவில்லை. அதோடு ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டிகளும் திறன் வாய்ந்தைவகளாக இல்லை. அதோடு சில நிர்வாகிகள் பூத் கமிட்டி அமைத்துள்ளதாக போர்ஜரியாக ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளனர். இவற்றை எல்லாம் கண்டுபிடித்த தலைமை நிர்வாகிகள், மறுபடியும் தொடர்புடைய நிர்வாகிகளை அழைத்து, பூத் கமிட்டியில் சில திருத்தங்களை கூறி வருகின்றனர். பூத் கமிட்டியில் இருப்பவர் நிச்சயம் அந்த வாக்குச் சாவடி அல்லது குறைந்த பட்சம் அந்த தொகுதியை சேர்ந்தவராகவாவது இருக்க வேண்டும்.

ஒரு பூத் கமிட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இடம்பெறக்கூடாது. பூத் கமிட்டிக்கு 60 பேர் கிடைக்கவில்லை என்றால் 15 பேராவது இருக்க வேண்டும். கண்டிப்பாக பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண் போன்றவற்றுடன் பூத் கமிட்டியின் தலைவர் மட்டும் அல்லாமல் உறுப்பினர்களின் செல்போன் எண்ணும் கட்டாயம் பெற வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கண்டிப்பான உத்தரவை தலைமை பிறப்பித்துள்ளது. மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்ட பூத் கமிட்டி தொடர்பான போர்ஜரி ஆவணம் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டதா? அல்லது விவரம் தெரியாமல் செய்யப்பட்டதாக என்கிற விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் தொடங்கி கிளை நிர்வாகிகள் வரை மாற்றப்படுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.