கோவை மாவட்டம் செட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி(47). அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வந்த இவர், கடந்த 1990 முதல் 1997 வரை அதிமுக மகளிர் அணியின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது கட்சிப்பணிகளில் அவர் ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் சகுந்தலா வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட அவர், முதல்வரும் துணை முதல்வரும் கோவை வரும் போது மனித வெடிகுண்டாக வருவேன் என மிரட்டல் விடுத்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.  பின் அந்த சிம் கார்டை உபயோகிக்காமல் தூக்கி வீசி இருக்கிறார். மீண்டும் மற்றொரு எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட அவர், இந்திரா நகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வெடிகுண்டுகள் இருப்பதாக கூறியுள்ளார். காவல்துறையினர் அங்கு சென்று சோதனையிட்ட போது தான் அது புரளி என தெரிய வந்தது.

இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டு பார்வதியின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடு மற்றும் தலைமை செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.