யூடியூபில் சினிமா விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று பலர் கிளம்பியுள்ளனர். தங்களைத் தாங்களே பெரிய விமர்சகர்களாக நினைத்துக்கொண்டு, திரைப்படத்தின் நல்லது - கெட்டது, பலம் - பலவீனம் ஆகியவற்றை ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்வதுடன் நில்லாமல், தாறுமாறாக தரக்குறைவாக விமர்சிப்பது பல யூடியூப் விமர்சகர்களின் வாடிக்கையாக உள்ளது. 

படத்தை தாறுமாறாக விமர்சிப்பதற்கு அப்பாற்பட்டு, படத்தை இயக்கிய இயக்குநர்களையும் நடித்த நடிகர்களையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசி, சர்ச்சைக்குள்ளாகி, அதற்காக பதிலடி விமர்சனங்களையும் வாரிக்குவித்து வருபவர், ப்ளூசட்டை மாறன். இவரது விமர்சனத்தில் ஈடுபாடும் உடன்பாடும் இல்லாத எதிர்க்கருத்துடையவர்கள் நிறைய பேர் உள்ள நிலையில், அவரது விமர்சனத்துக்கென்று குறிப்பிட்ட ரசிகர்களும் உள்ளனர்.

அண்மையில், ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ஜிப்ஸி திரைப்படத்தை விமர்சனம் செய்தபோது ஜீவாவை தனிப்பட்ட முறையில் இவர் மோசமாக தாக்கிப்பேசியது சர்ச்சையானது. 

இந்நிலையில், கொரோனா ஏற்படுத்திய அச்சுறுத்தலின் விளைவாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், கடவுள் மறுப்புக்கு ஆதரவாகவும் மதங்களுக்கு எதிராகவும் ஒரு பிரச்சாரம் செய்துள்ளார். 

தன்னை ஒரு கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களை காக்க உலகம் முழுதும் தங்களது உயிரை பணயம் வைத்து உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தன்னார்வ தொண்டர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

மனித சமுதாயம் நிறைய இயற்கை பேரிடர்களையும் கொடூரமான நோய்களையும் சந்தித்து, அதிலிருந்து மீண்டுவந்திருக்கிறது. அதேபோலவே மக்களின் ஒற்றுமையான ஒத்துழைப்புடன் இதிலிருந்தும் மீண்டுவருவோம்.

ஒரு கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது. கொரோனா உறுதியானதும் முதலில் வாடிகனில் சர்ச்சையும் பிறகு மெக்காவில் பள்ளிவாசலையும் அடுத்ததாக இந்தியாவில் சக்திவாய்ந்த கடவுள் என்று சொல்லப்படும்(கடவுள்னாலே சக்திவாய்ந்ததுதானே.. பின்ன அதில் என்ன சக்திவாய்ந்த கடவுள், சக்தியில்லாத கடவுள்னு என்று இடையில் நக்கல் வேற) திருப்பதி தேவஸ்தானத்தையும் சபரிமலை ஐயப்பன் கோவிலையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும் மூடினார்கள். பொதுவாக கடவுளுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர, சம்பிரதாயங்களை சரியாக முறைப்படி செய்யாவிட்டால், பசியும் பட்டினியும் கொள்ளை நோயும் வந்து பேரழிவை ஏற்படுத்தும் என்றுதான் சொல்வார்கள்.

ஆனால் இப்போது அந்த சம்பிரதாயங்கள் எல்லாம் செய்யப்படவில்லை. அனைத்து கோவில்களும் தேவாலயங்களும் பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. மதுரையில் லட்சக்கணக்கானோர் கூடும் அழகர் கோவில் திருவிழாவில் வெறும் 42 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். அழகரை ஆற்றில் கூட இறக்கவில்லை. இப்படியான சூழலில் லட்சக்கணக்கான பக்தர்களை திருவிழாக்கு வரவிடாமல் செய்துவிட்டு சாஸ்திர, சம்பிரதாயங்களை உங்களுக்கு வேண்டியவாறு மாற்றிக்கொண்டால் தெய்வக்குற்றம் ஆகிவிடாதா? பேரழிவுகள் ஏற்படாதா என்று கேட்டால், பக்தர்களை கூடவிட்டால்தான் கொரோனா வந்து அனைவரும் இறந்துபோவார்கள் என்று சொல்கிறார்கள். 

அப்படி கொரோனா வந்தால், உங்கள் கடவுள் வந்து காக்கமாட்டாரா என்று கேட்டால், கடவுள்லாம் வந்து காக்க மாட்டார்.. மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தான் காக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது.. கடவுள் இல்லை என்று நம்மை போல ஆட்கள்(அவரை கடவுள் மறுப்பாளராக காட்டுகிறார்) வந்து சொல்வதைவிட, இப்போது அந்தந்த மதத்தினரே கடவுள் இல்லை என்று ஒப்புக்கொண்டுதான், கோவில்களுக்கும் சர்ச்சுகளுக்கும் மசூதிகளுக்கும் பூட்டு போட்டிருக்கிறார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்லும் கடவுள் மறுப்பாளர்கள் யாரும் கொலையெல்லாம் பண்ணியது கிடையாது. ஆனால் கடவுளின் பெயரால் மதத்தையும் அதில் உட்பிரிவுகளையும் சாதிகளையும் உருவாக்கியவர்கள் தான், உலகம் முழுதும் கோடிக்கணக்கான கொலைகளை செய்துள்ளனர். ஒவ்வொரு நாட்டில் நடந்த படுகொலையும் கடவுள், மதம், சாதியின் பெயரால்தான் நடந்திருக்கிறது. கொலை செய்தவனையும் கடவுள் தண்டிக்கவில்லை.. கொலை செய்யப்பட்டவனையும் கடவுள் காப்பாற்றவில்லை.. அப்படிப்பட்ட கடவுள் தேவையா..? எல்லா மதத்திலும் கடவுள் மனிதனை நல்வழிப்படுத்துவார், நெறிப்படுத்துவார் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை. மாறாக கொலைகள் தான் நடந்திருக்கின்றன. மக்களின் பொருளும் நேரமும் விரயம் தான் ஆகியிருக்கிறது. 

மதத்தை வைத்து வியாபாரம் செய்த மதகுருமார்களுக்கு வேண்டுமானால் லாபமாக இருந்திருக்கும். அவிங்களும்(அவர்களும்) இந்த கொரோனா சமயத்தில் பதுங்கிட்டாய்ங்க.. எனவே எப்படி இந்த கொரோனாவை ஒழிக்க உலகமே சேர்ந்து போராடி கொண்டிருக்கிறதோ அதேபோல கடவுளையும் மதத்தையும் ஒழிக்க அனைவரும் போராடி ஒழிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் அடுத்த தலைமுறை சமுதாயமாவது நன்றாக இருக்கும். வீட்டுக்கு ஒரு பெரியார் பிறந்து கடவுளால் பிரயோஜனமில்லை என்று சொல்லியிருந்தால் கூட, கொரோனா உணர்த்தியதுபோல் உணர்த்தியிருக்க முடியாது என்றார் ப்ளூசட்டை மாறன். 

கடவுள் மறுப்பாளர்கள் மத்தியில் ப்ளூசட்டை மாறனின் கருத்துக்கு வரவேற்பு இருந்தாலும், கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் எதிர்க்கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துவருகின்றனர்.