வள்ளுவன் சொன்ன இறை நம்பிக்கைக்கு மாறாக மக்களின் கடவுள் நம்பிக்கைகளை அழிவாகவும், மலிவாகவும் விமர்சிப்பவர்கள் இன்றைக்கு ஏதோ வள்ளுவரின் மீது திடீர் பற்று கொண்டவர்களாக காட்டுவது வெட்டுக்கேடு என மு.க.ஸ்டாலினை அதிமுக விமர்சனம் செய்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் "என்ன செய்வது, மாமனாரை மணமகன் என்று மணவிழாவில் உளறிக் கொட்டிய விவகாரத்தை மடை மாற்றம் செய்வதற்கு முயற்சித்து அதிலும் வள்ளுவருக்கு பதிலாக பெரியார் என்று கூடுதலாக உளறிக்கொட்டி உலகத்தையே குலுங்கி சிரிக்க வைத்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

தினம் ஒரு தகவல் என்றால் அது தென்கச்சி சுவாமிநாதன். 

தினம் ஒரு உளறல் என்றால் அது திருவாளர் ஸ்டாலின் என்னும் கதையாகிவிட்டது. 

சரி அது போகட்டும், வாழும் வள்ளுவர் என்று கருணாநிதியை வர்ணித்து வள்ளுவரையும் அன்று இழிவுசெய்தவர்கள், வள்ளுவர் தந்த ஈரடி குறளை கலைஞரின் குறளோவியம் என்பதாக கதை மாற்றி இருட்டடிப்பு செய்த கண்ணியவான்கள். 

ஓவியர் வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்டு இந்நாட்டின் தலைமை அதனை ஒப்புக்கொண்டு அஞ்சல் தலை வெளியிட.. அதனையே அன்றைய தென்நாட்டின் தலைமையான பேரறிஞர் அண்ணாவும் தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட படமாக அறிவிப்பு செய்த திருவள்ளுவரின் அமர்ந்த கோலத்து அழகிய ஓவிய படத்தை தங்களது விளம்பர வெறிக்காக உருமாற்றி கம்பீரம் மிகுந்த வள்ளுவருக்கு பிட்டமே இல்லாதது போல வளைந்துநெளிந்து நடனமாடுவது போன்ற ஒரு நின்ற கோலத்து சிலையை நிறுவி வள்ளுவரை அவமானப்படுத்துபவர்கள்.

வள்ளுவன் சொன்ன ஆட்சி முறைக்கு மாறாக அலங்கோல ஆட்சியை தமிழகத்தில் நடத்தி அவமானப்பட்டவர்கள். வள்ளுவன் சொன்ன இறை நம்பிக்கைக்கு மாறாக மக்களின் கடவுள் நம்பிக்கைகளை அழிவாகவும், மலிவாகவும் விமர்சிப்பவர்கள் இன்றைக்கு ஏதோ வள்ளுவரின் மீது திடீர் பற்று கொண்டவர்களாக காட்டுவது வெட்டுக்கேடு அல்லவா?" என மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளது.