எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நாளை தஞ்சை வரும் தமிழக முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட காவிரிஉரிமை மீட்புக்குழு முடிவெடுத்துள்ளனர். 

கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியது. 

இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழகத்துக்கு காவிரி நீரை வழங்குவதில் தடை இல்லையென்றால் கர்நாடகா, காவிரியில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை என தமிழக வழக்கறிஞர் தெரிவித்தார். 

இந்நிலையில், காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததற்கு காவிரி உரிமை மீட்பு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதனிடையே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. 

அதன்படி நாளை தஞ்சையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க நாளை தஞ்சை வரும் தமிழக முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட காவிரிஉரிமை மீட்புக்குழு முடிவெடுத்துள்ளனர்.