மதுரையில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் கையில் துப்பாக்கியை உயர்த்திக் காட்டியபடி மேடையில் நிற்கும் புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 3,4 ஆகிய தேதிகளில் பாஜக இளைஞரணிக் கூட்டம் மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பாஜக மாநில இளைஞரணித் தலைவர் வினோஜ் செல்வம் மதுரை வந்திருந்தார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகள் நினைவுப் பரிசாக ஏர்கன் துப்பாக்கியை வழங்கினர். அதைத் தூக்கி காண்பித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இந்த புகைப்படம்  சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளவர்களை கட்சியில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் துப்பாக்கி விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல இவரை வரவேற்று மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் ஹிந்தியில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இதுதொடர்பாக பாஜக இளைஞரணித் தலைவர் வினோஜை கூறுகையில்;- அது ஏர்கன். அதனால் யாரையும் சுட முடியாது. பாஜக எப்போதுமே அமைதியை விரும்பும் இயக்கம். சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அமைதியாக இருக்க வேண்டும் எனபதற்காகவே நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்டாலின், திருமாவளவன் போன்ற அரசியல் தலைவர்களுக்கு நிகழ்ச்சிகளில் வீரவாள் பரிசாகக் கொடுக்கிறார்களே அவர்கள் என்ன யாரையும் வாளால் வெட்டிக் கொல்லவா போகிறார்கள்? அதுபோலத்தான் இதுவும். எங்கள் நிர்வாகி ஒருவர் துப்பாக்கி கடை வைத்திருப்பதால் அந்த ஏர்கன் பரிசாகக் கொடுத்திருக்கிறார் என்றார்.