இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி தாக்கல் செய்த சுயேச்சை எம்.எம்.ஏ.க்களின் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புதன் கிழமை நடத்துமாறு குமாரசாமி, சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் ஆளும் கூட்டணியிலிருந்த எம்எல்ஏக்கள் பதவி விலகுவதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ள நிலையில் கடந்த இரு வாரங்களாகக் கர்நாடக அரசியல் பரபரப்பாகக் காணப்படுகிறது. எனவே தனது பெரும்பான்மையை நிரூபிக்கக் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். கடந்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் நடைபெற்று அவை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு, நடைபெறும் கர்நாடக அரசியல் குழப்பம் ஒரு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் குமாரசாமி, நம்பிக்கை வாக்கெடுப்பைப் புதன் கிழமை நடத்துமாறு சபாநாயகருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் ரமேஷ் குமார், இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று உறுதியளித்திருந்த நிலையில் குமாரசாமியும், காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை அவரது அலுவலகத்தில் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இரு நாள் அவகாசம் கேட்டுள்ளனர். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதைத் தாமதப்படுத்துவது சாத்தியமற்றது. இன்றே வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது என்று சட்டமன்றம் கூடியதும் விளக்கமளித்துள்ளார் சபாநாயகர். 

இதனிடையே இன்று மாலை 5.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சங்கர், நகேஷ்  உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர் ஆனால், இதை அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

ஒருபக்க குமாரு, இன்னொருபக்கம் சபா, இவங்கள தட்டிக்கேட்க கூட முடியாமல் போகும் கோர்ட் என மூன்று பக்கமும் ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பதாக பிஜேபியின்  எடியூரப்பா செம காண்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.