கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைந்தது. காலியாக இருந்த 17 சட்டமன்ற தொகுதிகளில் 15 இடங்களில் அண்மையில் இடைதேர்தல் நடந்தது. இரண்டு இடங்களில் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தேர்தல் நடைபெறவில்லை.

இந்தநிலையில் இடைத்தேர்தல் முடிவுகள் இன்று காலையில் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் 12 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் 2 இடங்களிலும் சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். மத சார்பற்ற ஜனதாள கட்சி அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

எல்லாப்பூர், ரானேபென்னுர், விஜயநகர, யஷ்வந்த்பூர், மஹாலட்சுமி லேஅவுட், சிக்கபல்லபுரா, கே.ஆர்.புரம், கே.ஆர் பீட், அதானி, காக்வாட், கோகக், ஹிரேகூர் ஆகிய 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சிவாஜி நகர் மற்றும் ஹன்சூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஹோஸ்கோட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத்தில் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்றிருக்கும் நிலையில் அதை விட கூடுதல் இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.