BJP wins in Delhi polls

டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லியில் பல ஆண்டுகளாக ஒரே மாநகராட்சியாக இருந்தது. இதையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டது.

மேற்கண்ட 3 மாநகராட்சிகளின் உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 272 வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில், 2 வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

200 வார்டுகளுக்கு மேல் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 267 வார்டுகளில் புதுமுகங்களை பாஜக நிறுத்தியது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளது.

காங்கிரஸ் கட்சியும் 271 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. 200க்கு மேற்பட்ட வார்டுகளை கைப்பற்றுவோம் என கூறியுள்ளது.

இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. ஆனால் இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மட்டும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்படுகிறது.

காலை நிலவரப்படி பா.ஜனதா முன்னிலையிலும், டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி 3வது இடத்திலும் உள்ளது. பாஜக 151 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 45 வார்டுகளிலும், ஆம் ஆத்மி கட்சி 22 வார்டுகளிலும் உள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச தேர்தலை தொடர்ந்து பாஜக, டெல்லி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை கொண்டாட உள்ளது.